Tuesday, November 3, 2009

அந்தக் கணம்..

 (குறிப்பு : காதலியை தற்காலிகமாய் பிரியும் காதலனின் மனநிலையில் நின்று கொண்டு....)

அந்தக் கணம்..

மரணத்தின் வலி அறிந்தேன்
அந்தக் கணம்..

உயிர் பிரியும் உணர்வறிந்தேன்
அந்தக் கணம்..

பிரபஞ்சத்திலிருந்து விடுபட்டு

'கருந்துளை'யினால் உள் இழுக்கப்பட்டேன்
அந்தக் கணம்..

'கிரிகோரியன்' நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள
அந்த 12-12-2012 இன்றோ என ஐயமுற்றேன்
அந்தக் கணம்..

ஒற்றைப்பெண்ணை திருமணம் முடித்து
வழியனுப்பும் பெற்றோரின் மனநிலையில் நான்
அந்தக் கணம்..

மனது அழுதது; கண்களையும் துணைக்கு அழைத்தது;
மூளை எச்சரித்தது-நீ அழுதால் உன் துணைவியும் சேர்ந்துகொள்வாள் என;
ஆயினும் கண்கள் அழுதன; கண்ணீர் சிந்தாமல்..
அந்தக் கணம்..

மிகப்பிடித்த பொம்மையை
குழந்தையிடம் இருந்து பிடுங்கப்படும் போது
அதனிடம் இருக்கும் ஆற்றாமை, என்னிடம்
அந்தக் கணம்..

ஏழு நாட்களை ஏழு நோடிகளாக்கினால் 'கிடாய்' வெட்டுவதாய்
ஐயனாரிடம் வேண்டிக்கொண்டிருந்தது மனம்
அந்தக் கணம்..

அவள் சிந்திய கண்ணீர் அமிலம்
என் நெஞ்சை பொத்தலிட்டது
அந்தக் கணம்..

வீட்டில் வளர்த்த ரோஜாச்செடியில் மலர்ந்த
ஒற்றை ரோஜாவை
கண் தெரிந்து வாடவிடுவதாய் பரிதவித்தேன்
அந்தக் கணம்..


பிரிவு என்பது காதலை சோதிக்கும் அளவுகோல் என
ஆறுதல் பேசினேன், எனக்குள்

அந்தக் கணம்..

ஒற்றை உயிரை பத்திரப்படுத்தி அனுப்பிவிட்டு
வெறும் 'கூடாக' வீடு திரும்பினேன்..
அந்தக் கணம்..

No comments:

Post a Comment