Wednesday, December 9, 2009

என் காதலி..


உறக்கம் தொலைந்த 
பின் இரவுகளில், 
தொடர்பறுந்த 
பிம்பப் பரிமாணங்களாய் 
அவள்! 

பணி செய்துகொண்டிருக்கையிலும்
என்னை ஆள்பவள்,
அவள்!

இவ்வுலகை ரசிக்க வைத்தவள்,
அவள்!

மனநிலை மாற்றங்களை 
மொத்தமாய் குத்தகைக்கெடுத்தவள் 
அவள்!

இன்ப, துன்பங்களின் 
காரண கர்த்தா
அவள்!

சிரிக்க, 
அழ, 
வெட்கப்பட வைப்பவள்,
அவள்!

தாயை, 
தாய்மையை 
உணர வைப்பவள்
அவள்!

நிகழ், எதிர்கால 
'அகர முதல'
அவள்!

நினைவினிலும், 
நிஜத்தினிலும் 
என்னை முழுவதுமாய் 
ஆக்கிரமித்துக்கொண்டு, 
அவள்!!

என் காதலி - அந்த 'அவள்' !!!

Monday, November 30, 2009

சந்தோஷ நொடிகள்..

வண்டாடும் பூஞ்சோலையில் 
வானம் பார்க்க அமர்ந்து, 
கவிதை படித்தல்
சுகம்தான்!! 
இருப்பினும்,
காதலியுடன் பேசும் 
ஒரு நொடியை 
விடப் பெரிதல்ல...!!!

Friday, November 20, 2009

காதல்!

காதல்! 
பலரால் 
பலமுறை 
அலசப்பட்ட 
ஓர் உன்னத உணர்வு. 
என் பார்வையில்,
 "ஈருயிர் ஓருயிராகி ஓர் உணர்வை ஈருடல் உணர்தல்!!"

Thursday, November 5, 2009

என் பிறப்பு?

என் நினைவு தெரிந்த நாள் முதல்
நான் கேட்கும் கேள்வி
ஏன் என் பிறப்பு?

கேள்வியுடையவன் விடை தேடும் முயற்சியில்
கிடைப்பவை எல்லாம் விடை என சந்தேகிப்பான்..
நானும்!

படிப்பில் முதலிடம் பிடித்ததை பதிலாக்கினேன்;
நல்ல நண்பர்களால் விடையளித்தேன்;
தேவைக்கேற்ற வேலையை சரியான பதிலென்றேன்;
தாய் தந்தையரை பெருமைப்படவைத்து பதிலளிக்க முற்பட்டேன்.

என் விடை தேடும் பயணம்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக
மாறியது.
சூழல்கள் எனக்கு
முரண்பட்ட பல பதில்களைத்
தந்தது..

நான் பெற்ற பதில்கள் யாவும்
தவறானவையல்ல,
பயணத்தின் திசைகாட்டிகள்;
அடுத்த விடையை அடைய உதவிய
விதைகள்.

ஆயினும் ஒரு வெறுமை,
இன்னும் பதில் கிட்டவில்லை
என்ற எண்ணம் திண்ணையிட்டு
அமர்ந்திருந்தது
என் நெஞ்சில்..

அந்த நாள்!
அவளைக் கண்ட அந்த நாள்,
விடை தெரிந்ததாய் வியந்தேன்.

உயிருள்ள பதில்;
உணர்வுள்ள பதில்;
என்னைத் தேடிவந்த பதில்;
என் கேள்விக்கு பதில் - அவள்!

'என்னை இத்துனை நாள் தேடினாயாமே?'
என்று கேள்விகேட்ட 'பதில்' - அவள்!!
முதன் முதலாய் முழு மனம் நிறைந்த 'பதில்'
இனி என்னிடம் கேள்வியில்லை.
கேள்வியற்ற 'பதில்'
என்னிடத்தில்
அவள்!!!

Wednesday, November 4, 2009

அக்டோபரில் 'வசந்த காலம்'...

மழை ஓய்ந்த
ஓர் அக்டோபர் மாத சாயுங்காலம்.
மரங்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தன..
காரணம் தெரியவில்லை..
இலைகள் உதிர்ந்ததாலா?
மழை ஓய்ந்ததாலா?
ஆராயும் மனநிலையில் நானில்லை..

காரணம் அவள்!

என் மனதில் வசந்த காலத்தை படரவிட்டிருந்தாள்
என் இதயப்பூ மலர்ந்து சிரித்தது..
நானும் சிரித்தேன்.
சந்தோஷிப்பவனுக்கு துக்கப்படுபவர்கள்
ஒரு தூரப் புள்ளியாய் கூடத் தெரிவதில்லை..
எத்துனை உண்மை இது!!

மீண்டும் சிரிக்கிறேன்..
இம்முறை என் நிலை கண்டு..
எனக்குள்ளும் ஒருத்தி
'காதல்' விதைத்துவிட்டாளென!

வைரமுத்துவின் 'காதலித்துப் பார்'
கவிதைத் தொகுப்பில்
யாவும் உண்மையெனத் தோன்றியது...
அவரைப் பார்த்தால், கேட்க வேண்டும்
இந்த வரிகளுக்கு சொந்தக்காரி யாரென!!

ஆனந்தத்தில் ஆர்ப்பரிப்பவனும்,
துயரத்தின் அடிநாதத்தில் வசிப்பவனும்
கேட்கும் 'ஒற்றை வரம்' - 'அப்போதே மரணம்'
நானும் விதிவிலக்கல்ல..
இந்நொடியில் மரணிக்கவும்
மனப்பூர்வமாக....

காரணம் அவள்!!
என்னவள்...

Tuesday, November 3, 2009

அந்தக் கணம்..

 (குறிப்பு : காதலியை தற்காலிகமாய் பிரியும் காதலனின் மனநிலையில் நின்று கொண்டு....)

அந்தக் கணம்..

மரணத்தின் வலி அறிந்தேன்
அந்தக் கணம்..

உயிர் பிரியும் உணர்வறிந்தேன்
அந்தக் கணம்..

பிரபஞ்சத்திலிருந்து விடுபட்டு

'கருந்துளை'யினால் உள் இழுக்கப்பட்டேன்
அந்தக் கணம்..

'கிரிகோரியன்' நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள
அந்த 12-12-2012 இன்றோ என ஐயமுற்றேன்
அந்தக் கணம்..

ஒற்றைப்பெண்ணை திருமணம் முடித்து
வழியனுப்பும் பெற்றோரின் மனநிலையில் நான்
அந்தக் கணம்..

மனது அழுதது; கண்களையும் துணைக்கு அழைத்தது;
மூளை எச்சரித்தது-நீ அழுதால் உன் துணைவியும் சேர்ந்துகொள்வாள் என;
ஆயினும் கண்கள் அழுதன; கண்ணீர் சிந்தாமல்..
அந்தக் கணம்..

மிகப்பிடித்த பொம்மையை
குழந்தையிடம் இருந்து பிடுங்கப்படும் போது
அதனிடம் இருக்கும் ஆற்றாமை, என்னிடம்
அந்தக் கணம்..

ஏழு நாட்களை ஏழு நோடிகளாக்கினால் 'கிடாய்' வெட்டுவதாய்
ஐயனாரிடம் வேண்டிக்கொண்டிருந்தது மனம்
அந்தக் கணம்..

அவள் சிந்திய கண்ணீர் அமிலம்
என் நெஞ்சை பொத்தலிட்டது
அந்தக் கணம்..

வீட்டில் வளர்த்த ரோஜாச்செடியில் மலர்ந்த
ஒற்றை ரோஜாவை
கண் தெரிந்து வாடவிடுவதாய் பரிதவித்தேன்
அந்தக் கணம்..


பிரிவு என்பது காதலை சோதிக்கும் அளவுகோல் என
ஆறுதல் பேசினேன், எனக்குள்

அந்தக் கணம்..

ஒற்றை உயிரை பத்திரப்படுத்தி அனுப்பிவிட்டு
வெறும் 'கூடாக' வீடு திரும்பினேன்..
அந்தக் கணம்..

Monday, November 2, 2009

கனவு..

எண்ண அலைகளின் 
பிம்பம் 'கனவுகள்' என்பதில் 
எள்ளளவும் ஐயமில்லை எனக்கு. 
ஏனெனில் 
நேற்று மனத்திரையில் 
திரையிடப்பட்டது 
என் எண்ணங்களின் கோர்வை..